Updated: 13-01-2022 05:21 pm
சேவல் சண்டைக்கு அனுமதி தரக் கூடாது - மதுரை உயர்நீதிமன்றக் கிளை உத்தரவு!
தமிழகத்தில் பொங்கலை முன்னிட்டு ஆங்காங்கே சேவல் சண்டைகள் நடைபெறுவது காலம் காலமாக இருந்து வருகிறது. ஆனால் அந்த சேவல் சண்டையின் போது சேவலின் கால்களில் கத்தியை கட்டி சண்டைக்கு விடுவர். அதுபோக அந்த சேவலை வைத்திருப்பவர் போட்டியில் கலந்து கொள்பவர், முன் நிற்பவர் என பல பேர் அதில் சேவலை வைத்து பல லட்சக்கணக்கில் பந்தயம் கட்டுவார்கள் அதனால் பல கொலைகள் சண்டைகள் ஏற்பட்ட வண்ணம் இருந்து வந்தது. இதனையடுத்து உயர்நீதிமன்றம் இதற்கு தடை விதித்தது. மேலும் கால்களில் கத்தி கட்டி சண்டை போடக் கூடாது என்று உத்தரவு போட்டது.
அதையும் மீறி அரவக்குறிச்சி பூலாம்வலசு கிராமத்தில் சேவல் சண்டை விடுவதற்கு முன் ஏற்பாடுகள் தயாராகி வருவதை அறிந்த சமூக ஆர்வலர் ஒருவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்குத் தொடுத்து தடை கோரி இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.வைத்தியநாதன், ஜி.ஜெயச்சந்திரன் அமர்வு சம்பந்தப்பட்ட கலெக்டருக்கும் எஸ்பிக்கும் இது தொடர்பான அறிக்கை அளிக்கும்படியும், அதுவரை சேவல் சண்டை நடப்பதற்கு தடை விதித்து வருகிற 25ஆம் தேதி வரை வழக்கை ஒத்தி வைத்துள்ளனர்.#highcourt